Monday, October 09, 2006

அனு அகா - துணிவே துணை

திடீரென்று இப்படி ஒரு நிலை வரும் என்று அனு நினைக்கவே இல்லை. அன்பான கணவன், முத்தாக இரு குழந்தைகள். கணவரே நிர்வகிக்கும் சொந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் மனதிற்குப் பிடித்த வேலை. அழகிய ஆறு போல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை எல்லாம் ஒரே இரவில் அழித்துச் சென்றது அனுவின் கணவர் ரோஹின்டனின் திடீர் மரணம்.

கணவர் மரணத்தைத் தொடர்ந்து பதினான்கே மாதங்களில் ஒரே அன்பு மகன குரூஸும் விபத்தில் இறந்து போக, துக்கத்தில் அமிழ்ந்து போக முடியாது, அவர்களது சொந்த நிறுவனத்தின் பங்குகளும் நஷ்டத்தில் விழுந்து கொண்டிருக்கும் நிலை, இப்படி ஒரு நிலையில் தான் அனு அகா, தர்மாக்ஸ் நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பை ஏற்றார்.

1942 மார்ச்சில் மும்பையில் பிறந்த அனு அகா, தன் தந்தையின் நிறுவனமான தர்மாக்ஸில் 1985இல் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் சேர்ந்தார். 1996 பிப்ரவரியில் தான், மேற்குறிப்பிட்ட அனுவின் கணவர் மரணம் நிகழ்ந்தது.

அனுவின் கணவர் ரோஹின்டன் அகா ஒரு நல்ல தொழிலதிபர்; நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த மாமனாரின் நிறுவனத்தை இவர் நிர்வகிக்கத் தொடங்கியதும் லாபங்கள் கொட்டத் தொடங்கியது. மெல்ல தொழில் வட்டாரத்தில் நற்பெயர் பெற்று, பங்கு சந்தையிலும் காலடி எடுத்து வைக்கத் தொடங்கிய பொழுது தான் ரோஹின்டனின் எதிர்பாராத மரணம் சம்பவித்தது. தன் நிறுவனத்தைப் பற்றியோ அதன் வாரிசுரிமை பற்றியோ கணவர் எதுவும் பேசியே இராத சூழ்நிலையில் நிறுவனத்தை நிர்வகிக்கும் மொத்த பொறுப்பும் அனுவின் தலை மீது விழுந்தது.

கணவரையும் மகனையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பறிகொடுத்துவிட்டு, பாய்லர்கள் பற்றி எதுவுமே தெரியாத அனுவின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் சோர்ந்து போய் வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்து போயிருப்பார்கள். அனுவும் சோர்ந்து தான் போனார். தர்மாக்ஸின் பங்குகளின் மதிப்பும் 360 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகக் குறையலாயிற்று.

இந்தச் சமயத்தில் அனுவின் கீதையாக வந்தது ஒரு பங்குதாரரின் பெயரிலி கடிதம் - "எங்கள் பணத்துடன் விளையாடுகிறீர்கள்" என்று குற்றம் சாட்டியபடி. பொதுவாகவே கடமை உணர்ச்சி மிக்கவர்களுக்கு, அதைத் தூண்டிவிடத் தேவை ஒரு தீப்பொறி தானே. அனு உடனே சுதாரத்தெழுந்தார்.

இந்தியாவில், பெரு நிறுவனங்களின் நிர்வாக உயர் பதவிகளில் ஆண்கள் அதிகம் இல்லாத காலம் அது. அதுவரை இந்தியாவில் பொதுவாகச் செய்யாத ஒரு காரியத்தையும் அனு செய்தார். வெளியிலிருந்து நிர்வாகத்தின் நன்மை தீமைகளை ஆராய மட்டும் மூன்றாம்-நபர் நிறுவனமாக பாஸ்டன் கன்ஸல்டிங் நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் தர்மாக்ஸின் அப்போதைய நிலையை ஆராய்ந்து அதன் அமைப்பு சார் நன்மை-தீமைகளையும், லாபத்தைக் கூட்டத் தேவையான பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.

மீண்டும் அதுவரை தர்மாக்ஸில் இல்லாத விதமாக மிகுதியாக வேலைக்கிருந்தவர்களை ஆட்குறைப்பு செய்தல், நிறுவனத்தின் அதிகார மையங்களை மறு நிர்மாணித்தல் போன்ற பல துணிகர முடிவுகளை அனு தனியாக எடுக்க வேண்டியதாயிற்று. தர்மாக்ஸின் மூலத் தயாரிப்புக்கள்: தொழிற்சாலைகளில் பயன்படும் அடுப்புகள், குளிர் சாதனப் பெட்டிகள், நீர் சுத்தீகரிப்புக்கான வேதியல் பொருட்கள் இவை மட்டுமே. இவற்றைத் தவிர்த்த பிற உபபொருட்களையும் தயாரிக்கும் வேலையை ரோஹின்டன் தொடங்கி இருந்தார். பிற பொருட்களைத் தயாரிப்பதை நிறுத்தி, இந்த முக்கிய தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துவது என்றும் முடிவெடுத்தார் அனு.

அனுவின் துணிகர முடிவுகளால், நான்கரை வருடங்கள் கழித்து 2000த்தில் லாபம் காட்டத் தொடங்கியது தர்மாக்ஸ். 17 நாடுகளில் வியாபார அலுவலகங்களுடன் ஆறுவிதமான துறைகளில் இருக்கும் தர்மாக்ஸ் இன்றைக்கு பூனாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் முக்கிய இடம் வகிக்கிறது.

தொழில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், சமூகம் சார்ந்த சிந்தனைகளிலும் அதைச் செயல்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கிறார் அனு. தர்மாக்ஸின் வரலாற்றில் முதன் முறையாக 2002 இல் நிறுவனத்தின் லாபத்திலிருந்து, சேரிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான கல்விக்கு வழி செய்ய பூனாவில் "ஆகாங்க்ஷா" என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.


குஜராத் கொலைகளுக்குப் பின் முதன் முதலாக முதலமைச்சர் நரேந்திர மோடியை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு சில தொழிலதிபர்களில் அனுவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான CIIஇன் தலைவராகவும் பணியாற்றி இருக்கும் அனு தொழிற்சாலைகளில் பெண்ணுரிமை பற்றியும் பெண் தொழிலாளிகளுக்கான சம உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.

2004இல் தன் 62ஆவது வயதில் தர்மாக்ஸின் நிர்வாகப் பொறுப்புகளைத் தன் மகள் மெகரிடம் ஒப்படைத்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்ற அனு, இப்போது பூனேவில் தன் பேரப் பிள்ளைகளுடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இன்றும் மும்பையின் மகளிர் நல மேம்பாட்டு அமைப்பு, தில்லியில் காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பு, தர்மாக்ஸின் டைரக்டர், தெஹல்கா நாளேட்டின் டைரக்டர் என்று பல்வேறு விதமான பொறுப்புகளில் எப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார் அனு. இவை தவிரவும் பூனாவில் பல்வேறு அரசு சாரா அமைப்புகளில் உள்ள தன்னார்வலர்களைப் பொதுசேவைக்குத் தயார் செய்யும் பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விபாஸனா என்னும் புத்த மத தியான முறையில் அதீத ஈடுபாடு கொண்ட அனுவின் விருப்பமான பொழுது போக்கு நீர்விளையாட்டுக்களாம்.

ஊக்கமும் மன உறுதியும் இருந்தால், எந்தவித இடர்ப்பாடுகளையும் தாண்டி வாழ்வை வெற்றியாக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம் அனு அகா. மேலும் வெறும் லாபத்தை மட்டும் நினைக்காமல், சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டியது இன்றைய கார்ப்பொரேட் உலகின் கட்டாயம் என்பதையும் தன் துணிகரச் செயல்களின் மூலம் உணர்த்துகிறார் அனு.

References:
http://www.asha-foundation.org/women/women/anu_aga.php
http://www.telegraphindia.com/1041017/asp/look/story_3886963.asp
http://www.harmonyindia.org/hportal/VirtualPageView.jsp?page_id=1412
http://www.iimb.ernet.in/iimb/html/man-review-article-01.jsp?aid=58&edition=12&isvol=14&issueno=1
http://www.thehindubusinessline.com/life/2005/09/16/stories/2005091600060100.htm
http://www.businessworld.in/archive/200807/mktg5.htm