Friday, April 21, 2006

பயம் என்பது பயனற்றது


1978. விஜயா பாங்க் அலுவலகம்.

"என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. தனியாகத் தொழில் தொடங்குவதற்கு கடன் வேண்டும்"

நிமிர்ந்து பார்த்த சிப்பந்தி அதிர்ந்தார். எதிரே நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு இருபத்தி ஐந்து வயதுக்குள் தான் இருக்கும். எண்பதுகளில், தனியே தொழில் தொடங்க ஆண்களே தயங்கிய நேரம். இத்தனை சின்னப் பெண், எந்த நம்பிக்கையில் வந்து கேட்கிறாள்?!!

"என்ன தொழில்? சமையல் சம்பந்தப்பட்டதா? இல்லை ஏதேனும் ஆரம்ப நிலைப் பள்ளியா? " என்றார் அவர்

"இரண்டும் இல்லை. என்ஸைம்ஸ் எனப்படும் நுண்ணுயிர்களை வளர்க்கும் கலை."

அதெல்லாம் இந்தியாவிற்கு சரிப்பட்டு வருமா என்று வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம். அதுவும் மிருகவியலில் பட்டம் பெற்று, பீர் முதலியவற்றைத் தயாரிக்கும் கலையை ஆஸ்திரேலியாவில் பயின்று வந்திருக்கும் இந்தச் சின்னப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும்?

கடன் மறுக்கப்பட்டதோடல்லாமல், "பெண்களால் இன்னது தான் செய்ய முடியும் என்று வரைமுறைகள் உள்ளது. இந்திய சமுதாயத்தில் உன் போன்ற தனியொரு பெண்ணால் எதுவும் செய்ய முடியாது. நீ படித்த படிப்புக்கு ஏற்றாற்போல் ஒரு வேலையைத் தேடிக் கொள்." என்ற இலவச அறிவுரையும் கிடைத்தது..

சராசரி பெண்ணாக இருந்தால், இத்துடன் பயந்து போய் அறிவுரையை ஏற்று வேறு வேலைக்குப் போய் இருப்பாள். ஆனால் கிரண் இதற்கெல்லாம் பயப்படுபவள் இல்லை.

"பயம் என்பது பயனற்றது. சமுதாயம் என்ன சொன்னாலும் நினைத்ததை நடத்தியே தீருவேன்" என்று நிமிர்ந்து நின்ற கிரண் மஜும்தார் ஷா இன்றைக்கு பெங்களூரின் மிகப் பெரிய பயோடெக் சாம்ராஜ்யத்தின் அரசி..

இந்தியாவில் தொழில் முனைவோருக்குக் கொடுக்கப்படும் எல்லாப் பரிசுகளையும் ஏற்கனவே பெற்று, போன ஆண்டு(2005) பத்மபூஷன் பட்டத்தையும் பெறுவதற்கு காரணம், கிரணின் அயராத உழைப்பும் ' நிலத்தில் யாருக்கும் அஞ்சாத' அவரது நெறிமுறைகளும் தான்.

விஜயா பாங்க் தர மறுத்த கடனை கனரா வங்கி மேலாளர் கிரணின் நீடித்த உழைப்பையும், அயராத முயற்சியையும் பார்த்துத் தந்தபோதும், சொந்த நாட்டுக்காரர்கள் வைக்காத நம்பிக்கையை அயர்லாந்து விஞ்ஞானி ஆச்சின்க்லாஸ் வைத்து கிரணின் யோசனையின் மீது தன் சொந்த பணத்தை முதலீடு செய்த போதும் அவை சின்ட்ரெல்லாவின் செருப்பு போல் அதிசயமாக நடந்து விடவில்லை.

எண்பதுகளில் சிறு தொழில் முனைவோர் சந்தித்த பிரச்சினைகள் முதலீட்டு மேம்பாட்டுடன் முடிந்து விடவில்லை. கிரணை அச்சுறுத்துவதற்காகவே வந்தது பணியாளர் பிரச்சினை. வேலைக்கு ஆள் எடுக்கத் தேர்வு வைத்தால், கிரண் கேள்வி கேட்டதைவிட, அவரையும் அவரது நிறுவனத்தைப் பற்றியும் கேட்டுவிட்டு, வேலை வேண்டாம் என்று சொன்னவர்கள் தான் அதிகம். இதற்காகவும் சோர்ந்து விடவில்லை கிரண்.

கெஞ்சலும் கொஞ்சலுமாகத் தன் நெருங்கிய தோழியைத் தன் உதவியாளராய்ச் சேர்த்தார். தன் தொழிலுக்குத் தேவையான படிப்பு படித்தவர்கள் கிடைக்காத போது, யார் வந்தாலும் வேலை கொடுத்தார், அவர்களை வைத்து வேலை செய்ய முயன்றார். படிப்பறிவில்லாத சில தொழிலாளர்கல், சங்கங்கள் தொடங்கி வேலை நிறுத்தம் செய்தபோதும் அயராது எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.

உழைப்பு, உழைப்பு மேலும் உழைப்பு. இதுவே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்ட கிரணுக்கு அடுத்த சோதனை அவரது அயர்லாந்து பங்குதாரர் ஆச்சின்க்லாஸால் வந்தது. அவர் தனது பங்குகளை யூனிலிவர் நிறுவனத்திற்கு விற்ற போது, மீண்டும் தன்னை நிரூபிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார் கிரண். எல்லா சோதனையையும் மீறி, 1997இல், யூனிலீவரின் பங்குகளையும் வாங்கி அயல்நாட்டு சார்பில்லாத நிறுவனமாக்கினார் கிரண்.

சவால்களை சமாளிப்பது மட்டுமே இல்லாமல், தன் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் எப்போதுமே முனைப்புடன் இருக்கும் கிரணின் பயோகான் நிறுவனம், 2004இல் பங்குச் சந்தையில் நாட்டின் முதல் பயோடெக் தொழிற்சாலையின் பங்குகளாக வெளிவந்தது. வெளிவந்த புதிய பங்கு என்னும் நிலையிலேயே 32 மடங்கு அதிகமான விலையில் வாங்க மக்கள் தயாராக இருந்தது தான் இந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு சான்று.

இந்த வெற்றி கிரண் மஜும்தாருக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை. அடுத்தது என்ன என்று யோசித்துக் கொண்டே இருக்கும் அவரது சுறுசுறுப்பும் ஆண்கள் சமுதாயத்தில் எதிர்த்து நிற்கும் துணிவும் தாய்நாட்டின் மீது அவருக்கு இருக்கும் அன்பும் தான் இந்த பெரிய வெற்றிக்குக் காரணம்.

இன்றும் தன் சாதனைகளின் மூலம் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும் கிரண் நமக்கு என்ன சொல்கிறார் தெரியுமா? "இன்றைய இளைஞர்களுக்கு ஆழ்ந்த அகன்ற தொலைநோக்குப் பார்வை வேண்டும். உங்கள் இலக்கு சிறியதாகவும் இருக்கலாம், பெரியதாகவும் இருக்கலாம்; அதை அடைய உங்கள் செயல்திட்டம் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், அடையவேண்டும், அடைந்தே ஆக வேண்டும் என்னும் வெறியும் முழுமையான ஈடுபாடும் இருந்தால், வெற்றி உங்களைத் தாண்டிப் போகவே முடியாது".

1 comment:

- யெஸ்.பாலபாரதி said...

இன்னும் கூட விரிவாக கிரண் பட்ட சோதனைகளை சொல்லியிருக்கலாமோன்னு தோனுது.
ஆனாலும் துவக்கமே ஜோர் தான்..
அடுத்த ஸ்டார் நீங்க தான்! :)