Wednesday, April 26, 2006

சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளை

பக்கத்தில் படத்தில் வெள்ளந்தியாக சிரிக்கும் சின்னபிள்ளை உண்மையிலேயே கல்வியின் கறைகூட படியாத கிராமத்துப் பெண்மணி. சாதனைப் பெண்டிர் பக்கத்தில் வருமளவிற்கு இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுவது இயல்பே.

சின்னபிள்ளை 1999ஆம் வருடம், இந்திய அரசால் சமூக முன்னேற்றத்திற்கு உதவிய பெண்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த விருதான ஸ்திரீ சக்தி விருதினைப் பெற்றிருக்கிறார்.
இந்திய அரசின் விருது பெறுவதெல்லாம் ஒரு பெரிய செய்தியா என்பவர்களுக்கு சின்னபிள்ளையின் கதையை அடியிலிருந்து சொன்னால் தான் புரியும்.

ஆறு சகோதர சகோதரியர் இருக்கும் ஏழைக் குடியானவர் வீட்டில் ஏழாவதாகப் பிறந்தார் சின்னபிள்ளை. பிறந்த சில நாட்களில் தாயை இழந்த சின்னபிள்ளை, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்னும் அந்தக் கால நியதிப்படி வயல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்

பதினெட்டு வயதில் சின்னபிள்ளைக்குக் கல்யாணம். கணவன் பெருமாளுக்கு மதுரைக்குப் பக்கத்தில், அழகர்கோயிலுக்கு அருகில் ஒரு குக்கிராமம், புளிச்சேரியில் வயல்வேலை.

புகுந்த இடத்திலும் தொடர்ந்தது ஒற்றுமை வறுமை. தன் சொந்த ஊரில் கூடப் பிறந்தவர்களுக்காக உழைத்த சின்னபிள்ளை, இப்போது தன் பிள்ளைகளுக்காக உழைக்க ஆரம்பித்தார்காலையிலும் மாலையிலும், பண்ணையார் வீட்டில் வேலை. மதியம் கணவனுடன் வயலில் விவசாயம்.

வானம் பார்த்த பூமியான புளிச்சேரியின் மக்கள் வானத்தை நம்பி வாழவில்லை. நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஈட்டிக்காரர்களையும் மட்டுமே நம்பி இருந்தன புளிச்சேரியின் விவசாயக் குடும்பங்கள். வயிற்றுக்கு உணவில்லாமல், சத்துணவுக்காக மட்டும் பள்ளிக்குச் சென்று வரும் பிள்ளைகள். நாள் முழுவதும் உழைத்தும், சாப்பிடும் அரிசிக்கே கடன் வாங்கி வட்டி கட்ட வைக்கும் போதும் போதாத கூலி.

அயராத உழைப்பாலும் அரவணைக்கும் பண்பாலும், சின்னபிள்ளை வெகு விரைவில் கூலி வேலை செய்யும் பெண்களின் கொத்துத் தலைவியானார். பொதுவுடைமை, தனிவுடைமை என்னும் சொற்களே தெரியாத போதும் சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணையாரைத் தட்டிக் கேட்கலானார் சின்னபிள்ளை. சின்னபிள்ளையின் குழுவில் வேலை செய்தால் சேரவேண்டிய கூலி கட்டாயம் கிடைக்கும் என்று பெண்கள் சின்னபிள்ளை அழைத்தால் ஓடிவரத் தயாராக இருந்தனர்.

பாடுபட்டு உழைக்கும் பெண்கள் வீட்டில் யாருக்காவது தலைவலி, காய்ச்சல் என்ற போதும் வட்டிக்குக் கடன் வாங்குவதையும் அதனால் அவர்கள் நாளுக்கு நாள் ஏழைகளாகிக் கொண்டே செல்வதையும் காணக் காணச் சின்னபிள்ளைக்குப் பொறுக்கவில்லை. இதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் புளிச்சேரிக்கு வந்தார் "தான்" (dhan) அமைப்பினைச் சேர்ந்த வாசிமலை.

வாசிமலை சொன்னதெல்லாம் சேமிப்பு மட்டும் தான். "நீங்கள் சம்பாதிக்கும் உங்கள் பணத்தின் முதல் செலவு சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்" என்னும் நகரங்களில் பரவலாக இருந்த ஒரு கருத்தைத் தான் முன்வைத்தார். அதனைக் கூட ஏற்கத் தயாராக இல்லை அப்போது தான் சீட்டுக் கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்திருந்த புளிச்சேரிப் பெண்டிர்.

சின்னபிள்ளையின் உதவியோடு வாசிமலை மீண்டும் தனது பிரசாரத்தைப் பலமாகச் செய்தார். சின்னபிள்ளை சொன்ன ஒரே காரணத்துக்காக புளிச்சேரியின் முதல் சிறுசேமிப்பு அமைப்பு பத்துப் பெண்களின் 20 ரூபாய்களைக் கொண்டு தொடங்கியது. 'புள்ளுக்கருவூலம்' என்று பெயரிடப்பட்ட அந்த சிறுசேமிப்பு அமைப்பிலிருந்து, குழுவிலிருந்த பெண்களின் தேவைக்கு கடன் கொடுக்கத் தொடங்கினார்கள். 60 சதவிகித வட்டி. எனினும், மற்ற வட்டிக்கடைக்காரர்களை விட குறைவே.

கொஞ்சம் கொஞ்சமாக நூறு, ஐநூறாயிற்று; ஐநூறு ஆயிரமாயிற்று. ஆறே மாதத்தில், தம் சுய தேவையைக் கவனிக்கக் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லாது போயிற்று.

சின்னபிள்ளை இந்த அமைப்பை இத்துடன் விடவில்லை. மெல்ல மெல்ல தன் சொந்தகிராமத்திலேயே மேலும் பெண்களைச் சேர்த்து தனித் தனி களஞ்சியங்கள் கட்ட உதவி செய்தார். அதிக பெண்கள் சேரும் போது, கடன் கொடுக்கும் விதமும், சேர்ந்த பணத்தைப் நிர்வகிப்பதும் கடினமாக இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு களஞ்சியமும், அதிகபட்சம் இருபது பெண்களுடன் இயங்கத் தொடங்கியது.

தனித்தனி களஞ்சியங்களாக இருந்ததால், ஒரே கிராமத்தில் ஐந்து ஆறு களஞ்சியங்கள் கூட இருக்கத் தொடங்கியதும், 1993இல் இவற்றை ஒருங்கிணைத்து "வைகை வட்டாரக் களஞ்சிய மன்றம்" தொடங்கப்பட்டது. அல்லும் பகலும் களஞ்சியம் ஒன்றே கருத்தாக செயல்பட்ட சின்னபிள்ளை தான் இதற்குத் தலைவி. ஒருங்கிணைந்த அமைப்பு உருவானதும், வங்கிகள் கடன் கொடுக்க எந்தத் தயக்கமும் காட்டவில்லை. கனரா வங்கியின் கடனுதவியால் கடைகள், நிலம் வாங்குதல், கிணறு வெட்டல், வண்டி, வீடு வாங்குதல் என்று வளர்ச்சிப் பணிகள் கிராமங்களை நிறைக்கத் தொடங்கியது.

1996இல் டாடா நிறுவனத்தைக் கவர்ந்து அவர்தம் பொருளுதவி பெற்றபோதும் சரி, 1999இல் பிரதமர் வாஜ்பாயின் கையால் விருது பெற்றபோதும் சரி, சின்னபிள்ளை இதுதான் என் இலக்கு என்று நின்றுவிடவில்லை.

இன்று 4000 உறுப்பினருடன், 88 கிராமங்களில் விரிந்திருக்கும் களஞ்சியம் அமைப்பு இன்றைய மகளிர் சுய உதவிக் குழுக்களின் மிகப் பழமையான முன்னோடியாகும். ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் இன்று சின்னபிள்ளையைத் தம் மாநிலப் பெண்டிருக்கும் உதவி செய்ய அழைத்துக் கொண்டிருக்கின்றன.

ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் இன்னும் சின்ன பிள்ளை போல, உற்சாகத்தோடு மதுரையைச் சுற்றி உள்ள சிற்றூர்களில் சேமிப்பு, சுய உதவி, வங்கிக்கடன் என்னும் எல்லா பரிமாணத்தையும் எடுத்துச் சொல்லி, களஞ்சியங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சின்னபிள்ளை. உண்மையிலேயே பாண்டிநாட்டு மகளிர் சக்தியாகத் தான் விளங்குகிறார் இந்த சின்னபிள்ளை.

6 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இதுவும் நல்லாவே வந்திருக்கு!
ஆனாலும் என்னமே ஒன்று குறையுது.. :(
அது என்னன்னு தெரியலை.
அப்புறம் தாங்கள் கொடுத்திருக்கும் "தான்" இணைப்புச்சுட்டி சரியா வேலை செய்யலை. அதையும் சரி பண்ணுங்கோ!
வாழ்த்துக்கள்.

நன்மனம் said...

பொன்ஸ்,

இந்த பக்கத்த ஏன் உங்கள் profileல் இனைக்க வில்லை?

நன்றாக உள்ளது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

பொன்ஸ்,
உங்களின் இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.

சிறப்பாக இருக்கிறது.
சின்னப்பிள்ளை பற்றி எழுதியமைக்கு நன்றி. இதுபோல் சமீபத்தில் குமுதத்தில் வந்தது என நினைக்கிறேன். இவர் போன்றவர்கள் அதிகம் அறியப்பட வேண்டும்.
அனைவரும் இந்திரா நூயி என்று ஜல்லி அடிக்கும் போது எரிச்சல்தான் வருகிறது :-( .இது போல் சாதித்த சாதாரணப் பெண்களைப் பற்றி நிறைய எழுதவும்.

உண்மையில் கொண்டாடப்படவேண்டியவர் இவர்.

ஒரு வருடத்திற்கு முன் "உலக அழகி சின்னப்பிள்ளை" என்று ஒரு பதிவு எழுதும் எண்ணம் இருந்தது எனக்கு.சும்மா உடல் வளமையால் பரிசு பெற்று ''நான் ஸேவை ஸெய்யப்போறேன் " என்று சொல்லும் அழகிகள் கூட்டம்தான் வெளி உலகத்துக்கு தெரிகிறது. இவர் போன்ற எளியவர்கள் தெரிவதில்லை என்ற ஆதங்கத்தில் எழுத நினைத்தேன் முடிக்க முடியவில்லை.

www.goodnewsindia.com ன் வாசகன் நான். அதில் இது போல் நிறைய மக்களைப் பார்க்கலாம்.

Dhan அமைப்புடன் ஒரு எனக்கு சமீப காலமாக தொடர்பு உண்டு. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

உங்களின் இந்தப் பதிவு நன்றாக உள்ளது.

பொன்ஸ்~~Poorna said...

கல்வெட்டு,
இந்தப் பதிவில், வித்தியாசமான சாதாரண பின்னணியிலிருந்து வந்த சாதனைப் பெண்களைப் பற்றி எழுதும் எண்ணத்தில் தொடங்கினேன்.. அத்தனை தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்பதுடன், செய்தி சேகரிப்பதிலும் கொஞ்சம் சுணக்கம் இருப்பதால், இதை எந்த வலைத்திரட்டியிலும் இணைக்கவில்லை..

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி நன்றாக உள்ளது. தான் அமைப்பைப் பற்றி மேலும் எழுதுங்கள். அது பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவு..

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல செய்தி பொன்ஸ். இவங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்பொழுது தான் முழுவிவரமும் தெரியவந்தது. எனக்கு தெரிந்து சாதனைப்பெண்களைப்பற்றி ஒரு புத்தகம் வந்து இருக்கிறது பெயர் ஞாபகம் இல்லை அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

மணி ப்ரகாஷ் said...

இப்போது தான் நான் அறிந்தேன், சின்னபிள்ளை பற்றியும் உங்களின் வலைப் பக்கத்தையும்..

இரண்டும் அருமை.வாழ்த்துக்கள்.

நம்ம ஊருக்கு பக்கத்தில இவ்வளோ பெரிய நபர் இருப்பதை தெரியாமலே நான் இவ்வளவு நாளாய் :(


இப்பதிவிலிருந்து அறிந்தது...

எண்ணங்களே வாழ்க்கை
எழுத்துக்களால் (கல்வி) அல்ல..